பரிதிமாற் கலைஞர் (1870 - 1903)

பரிதிமாற் கலைஞர் (1870 - 1903)
அறிமுகம்
கி.பி.1870-ம் ஆண்டு இதே ஜூலை 6-ந் தேதி மதுரை அருகே விளாச்சேரியில் கோவிந்த சிவனார்.- லட்சுமி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி.தனது தந்தையிடமே வடமொழி பயின்றார். மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.
ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித் தொகையைப் பெற்று சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
தமிழ்ப் பணி
- குழந்தைகள் 12 வயது வரை தமிழிலேயே கல்வி கற்க வேண்டும் என்று முழங்கியவர்.
- தனது ‘தனிப்பாசுரத் தொகை’ என்ற நூலில், சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என தமிழில் மாற்றிக்கொண்டார்.
- மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த "ஞானபோதினி" என்னும் இதழைப் பரிதிமாற்கலைஞர் நடத்தினார்.
- 23 வயதில் கல்லூரியில் கிடைத்த தத்துவத் துறை ஆசிரியர் பணியை ஏற்காமல், குறைந்த சம்பளமாக இருந்தாலும் தமிழ்த் துறையையே தேர்வு செய்து பணி செய்தார்.
- பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. இவரது எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
- தமிழை செம்மொழி என முதன் முதலில் மெய்ப்பித்தவர். சென்னைச் செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.
- கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதினார். மதுரையில் 4-ம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயற்சி மேற்கொண்டார்.
- பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற் கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
- 1901 - மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழ் பரிதிமாற் கலைஞரின் ‘உயர்தனிச் செம்மொழி’ என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
- நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வுநூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
படைப்புகள்
- குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
- சபாபதி முதலியாரின் திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, பஞ்சதந்திரம் உட்பட 67 நூல்களைப் புதுப்பித்து வெளியிட்டார்.
- ‘தமிழ் வியாசங்கள்’ என்ற பெயரில் ஞானபோதினி, விவேகசிந்தாமணி இதழ்களில் தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டார்.
- ரூபாவதி, கலாவதி முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றி,ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
- "சித்திரக்கவி" என்னும் நூலைப் படைத்தார்.'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும் படைத்துள்ளார்.
விருதுகள் மற்றும் சிறப்புகள்
- விளாச்சேரி அக்ரஹாரம் தெருவில் உள்ள பரிதிமாற் கலைஞரின் வீடு புதுப்பிக்கப்பட்டு ‘நினைவு இல்ல’மாக போற்றப்பட்டு வருகிறது.
- வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடமையாக்கியுள்ளது.
- யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் இவரது தமிழ்ப் புலமை, கவிபாடும் திறனைக் கண்டு ‘திராவிட சாஸ்திரி’ என்னும் பட்டத்தை வழங்கினார்.
- நடுவண் அரசு ‘V.G.சூரியநாராயண சாஸ்திரியார்’ என்ற பெயரில் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
- ‘‘33 ஆண்டுகளே வாழ்ந்த இவர், அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள்’’ —--என தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
- தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்தது தொடர்பான நிகழ்வு ஒன்றில் 'சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர் போன்றோர் பாடுபட்டனர்’.அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பெருமிதத்துடன் நன்றி தெரிவித்திருந்தார் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.